காரட்அல்வா

தேவையான பொருட்கள் :

4 கப் காரட் துருவியது
1 1/4 கப் சர்க்கரை
1/2 லிட்டர் பால்
1 சிட்டிகை உப்பு
1/2 Tsp ஏலக்காய் பொடி

செய்முறை :
மைக்ரோ வேவ் அவனில் வைக்கக் கூடிய கண்ணாடி பாத்திரத்தில் காரட் துருவலை எடுத்துக் கொள்ளவும்.
பாலை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பை போட்டு கலக்கி மைக்ரோ வேவ் அவனில் 8 நிமிடங்கள் ஹை பவர் செட்டிங்கில் வைக்கவும்.

இடையில் ஒரு முறை எடுத்து கிளறி விடவும்.
8 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து காரட் வெந்து விட்டதா என பார்க்கவும்.

இல்லையெனில் மேலும் 3 நிமிடங்கள் மைக்ரோ வேவ் செய்யவும்.

வெந்ததும் வெளியில் எடுத்து சர்க்கரையை சேர்த்து ஒரு கரண்டியினால் நன்றாக கலக்கி விடவும்.

மறுபடியும் 10 நிமிடங்கள் மைக்ரோ வேவ் செய்யவும்.
சர்க்கரை பாலில் கரைந்து விடும். பாத்திரத்தில் உள்ள கலவை சர்க்கரை கரைந்துள்ளதால் நீர்த்து காணப்படும்.
நடுவில் ஒரு முறை வெளியில் எடுத்து கிளறி விட்டு மறுபடியும் அவனில் வைக்கவும்.

பால் சேர்த்திருப்பதால் காரட் நிறம் சிறிது வெளிர் நிறத்தில் இருக்கும்.
10 நிமிடங்கள் ஆனதும் ஒரு முறை கலக்கி விட்டு மீண்டும் 20 நிமிடங்களுக்கு செட் செய்யவும்.

இடையில் அவ்வப்போது எடுத்து கிளறி விடுவது மிக மிக அவசியம்.

ஒவ்வொரு முறை வெளியில் கிளறுவதற்காக எடுக்கும் போதும் பால் சுண்டியுள்ளதை காணலாம்.
காரட்டின் நிறமும் அழ்ந்த ஆரஞ்சு நிறமாக மாறுவதை காணலாம்.
20 நிமிடம் வெந்த பிறகு அடியில் சிறிது நீர் இருக்கும்.
அதனால் மறுபடியும் 5 நிமிடத்திற்கு அவனில் வைத்து சூடு பண்ணவும்.

இப்போதும் இடையில் ஒரு முறை எடுத்து கிண்டி விடுவது அவசியம்.
தேவையானால் இன்னும் 3 அல்லது 5 நிமிடங்களுக்கு அவனில் வைத்தெடுக்கவும்.

ஏலக்காய் போடி தூவி கிண்டி விடவும்.
காரட்டின் மணமே நன்றாக இருக்கும். அதனால் நான் ஏலக்காய் பொடியை மணத்திற்காக சேர்ப்பதே இல்லை.

காரட் அல்வாவை ஒரு மூடி கொண்ட பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
நன்கு ஆறிய பின் மூடவும்.
பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்து உபயோகிக்கலாம்.

இதை சாப்பிட சொல்லி கொடுக்கனுமா என்ன??!!
ஒரு கிண்ணத்தை எடுத்து காரட் அல்வாவை போட்டு பாதாம் துருவல் கொண்டு அலங்கரித்து சாப்பிடலாம்.
ஐஸ் கிரீமை காரட் அல்வாவின் மேல் வைத்தும் ருசிக்கலாம்.

குறிப்பு : இங்கு கொடுத்துள்ள சர்க்கரை அளவு கொண்டு செய்த அல்வா சரியான தித்திப்புடன் இருக்கும். தித்திப்பு அதிகமாக விரும்புகிறவர்கள் அளவை கூட்டிக்கொள்ளவும்.
இன்னும் சுவை கூட்ட பாலின் அளவையும் 1/2 லிட்டருக்கு பதில் 3/4 லிட்டர் எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *