ஸ்பான்ஞ் தோசை

இந்த தோசை வகையை எங்கள் சென்னை உணவகத்தில் முதன் முதலாக எங்கள் சமையல் கலை நிபுணர் திரு.சுப்பையா நாயுடு அவர்கள் ஸ்பெசல் உணவு பட்டியலில் ஒரு முறை முயற்சிக்க அந்த சமயத்தில் கோவையில் வாடிக்கையாளர்களாக வந்து இருந்த கருத்தரிப்பு மருத்துவர் இந்த வகை தோசையை உண்டு மிகவும் பாராட்டினார்.

அதன் பிறகு நான் கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ராவ் மருத்துவமனை க்கு எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். அங்கு அந்த மருத்துவர் ( துனை பெண் மருத்துவர்) என்னை சந்தித்தார் எனக்கு அவர் முகம் சுத்தமாக ஞாபகம் இல்லை.

அவர் என்னிடம் வந்து நீங்கள் தானே ஸ்பான்ஞ் தோசை கதையை கூறி தங்களை அறிமுகம் படுத்தி கொண்டார். அவர் அந்த தோசை வகையை கோவை மற்றும் அவர்கள் சென்ற ஊர்களில் இந்த தோசை வகையை தேடி பார்த்தும் அந்த பக்குவம் கிட்டவில்லை என்று கூறினார் !!

அவர்களிடம் இந்த பக்குவ இரகசியத்தை விளக்கினேன். அடுத்த முறை சென்று இருந்த போது அவர்கள் ஸ்பான்ஞ் தோசை அருமையாக வந்ததாகவும் அவர்கள் வீட்டாரும் மிகவும் இரசித்து உண்டாதகவும் கூறினார்.

அவர்கள் பாராட்டை பெற்ற பிறகு எனது இனிய நண்பர்களாகிய உங்களிடம் இந்த இரகசியத்தை பிரசூரம் செய்கிறேன்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி 2 கப்
வெள்ளை அவல் 1/4 கப்
புளிப்பான மோர் 4 கப்
ஆப்ப சோடா 1/4 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
பசு வெண்ணை தேவையான அளவு

செய்முறை

1. அரிசியை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும் .

2. இப்பொழுது நன்றாக கழுவிய அரிசி அவல் இரண்டையுமே ஒன்றாக ஒரு பாத்திரத்துல எடுத்து கொள்ள வேண்டும் அதில் புளிப்பான மோரை சேர்த்துகோங்க இதை இரவு 7 மணிக்கெல்லாம் ஊறவைக்க வேண்டும்.

3. காலை 7 மணிக்கெல்லாம் அதை கிரைண்டரில் இட்டு ஆட்ட வேண்டும் கவனம் தேவை இட்லி / தோசை பதத்தை விட சிறிது தளர்வாக அதாவது கொஞ்சம் தண்ணியா ஆட்டி கொள்ளவும்.

4. அதில் தேவையான அளவிலான உப்பு தூள் மற்றும் ஆப்பசோடாவை சேர்த்துகோங்க நன்றாக கலந்து கொள்ளவும்.

5. பிறகு அதில் இரும்பு தோசை கல்லை சூடு செய்து அதில் இந்த மாவை கொஞ்சம் ஊத்தப்பம் போல் ஊற்றி கொள்ள வேண்டும்.

6. அதன் ஓரங்களில் பசு வெண்ணையை தேவையான அளவிலான விட்டுகோங்க வேகும் சமயத்துல தோசையில் நிறைய சிறிய சிறிய ஓட்டைகள் உருவாக வேண்டும். தோசையை திருப்பி போடாமல் , இரண்டாக மடிக்கவும் கூடாது. அதன் மேல் ஒரு மூடி போட்டு மூடி எடுத்து விடவும்.

7. இதை சைவ உணவுகளோடு சாப்பிட வேண்டும் என்றால் வேர்கடலை , பூண்டு, வரமிளகாய் , தேங்காய் துருவலோடு செய்யும் துவையல் சரியான பக்க உணவாகும்.

அசைவ உணவுகள் என்றாலே மட்டன் கொத்துக்கறி பிரட்டல், மட்டன் கெட்டி குழம்பு, பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி , நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கால் பாயா , நுரையீரல் கெட்டி குழம்பு, குடல் கெட்டி குழம்பு இவை அனைத்துடன் சாப்பிட மிகவும் டக்கராக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *