யாழ்ப்பாணத்து குழல் புட்டு

யாழ்ப்பாணத்தில் அரிசிமாவினால் செய்யப்படும் உணவு பண்டங்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கம் ஆகும்.இந்த வகையில் இடியப்பம் மற்றும் பிட்டு ஆகியன அரிசிமாவினாலேயே தயாரிக்கப்படுகின்றன.

■ தேவையான பொருட்கள்

● அரிசிமா

● தேங்காய்

● உப்பு

● சுடு நீர்

● புட்டுக்குழல்

● அகப்பைக் காம்பு

■ செய்முறை

நெல்லை உரலில் இடித்து அளவான பதத்தில் தீட்டி சிவப்பு பச்சை அரிசியை எடுக்க வேண்டும். துப்புரவாக்கிய பச்சை அரசியை மூன்று மணிநேரம் ஊறவிட்டு கல் உரலில் இடித்து மாவை அரித்து எடுக்க வேண்டும். அரித்தெடுத்த மாவை நெருப்பில் பதமாக வறுத்து அதன் பின்னர் மீண்டும் அரித்து எடுக்க வேண்டும். மாவை மென்மையாக வறுக்க வேண்டும்.

அரிசிமாவுடன் தேவையான அளவு உப்பு கலந்து நன்றாக கொதித்த நீரை பாத்திரத்தில் எடுத்து சிறிது நேரம் வைத்த பின்னர் மெல்லியசூட்டில் விட்டு குழைக்க வேண்டும்.

குழைத்த மாவை கொத்து சுண்டினால் தொத்த வேண்டும் தற்போது மாவைக் கொத்துவதற்கு உயர்ந்த சில்வர் பேணியினைப் பயன்படுத்துவார்கள்.

இளம் தேங்காய் ஒன்றை எடுத்து உடைத்து,பூவாக திருவவேண்டும். முன்னதாக எடுத்து சுத்தப்படுத்தி எண்ணெய் பூசி வைத்த குழலின் அடியில் அடைப்பானைப் போட்ட பின்னர் சிறிதளவில் மாவை எடுத்து போட வேண்டும். குழைத்த மாவினைப் போட்ட பின்னர் சிறிதளவில் துருவிய தேங்காய்ப் பூவினை இட்டு பின்னர் மாவினை இட்டு மேலாக சிறிது தேங்காய்ப்பூவினை இட்டு புட்டு அவிக்கும் பானையின் மேல் வைக்க வேண்டும்.

பிட்டு அவிந்தவுடன் இறக்கி அகப்பை காம்பால் பின்புறத்தில் இருந்து தள்ளி இறக்க வேண்டும்.சுடு பிட்டை வாழை இலையில் போடுவது உடலுக்கு நல்லது.

இவ்வாறு செய்யும் குழல் புட்டுக்கு சுவை அதிகம். சிலர் கோதுமை மா, குரக்கன் மா மற்றும் ஆட்டா மா போன்றவற்றிலும் குழல் புட்டு அவிப்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் குழல்புட்டுக்கு பொரித்து இடித்த சம்பல்,வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், பொரியல், குழம்பு போன்ற உப கறிகளை பயன்படுத்துவார்கள்.

எனினும், அரிசிமாக் குழல்புட்டு என்றவுடன் எங்களது நினைவில் வருவது தென்மராட்சி மாம்பழமே. வயல்களில் விளைந்த நெல்லினைப் பக்குவமாக இடித்து மாவாக்கி புட்டு அவிப்பதுடன், அதற்குத் தேவையான தேங்காயினை உடனே மரங்களிலிருந்து பிடுங்கி துருவிப் பாவிப்பதுடன், தங்களது வீட்டு மரங்களில் காய்த்த மாம்பழங்களையும் பாவிப்பார்கள். எனினும், இவை எல்லாம் தற்போது காணமற்போய்விட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close